Tuesday, July 21, 2009

உறக்கம் தொலைத்த இரவுகளில்...

1. "அன்றொரு நாள் தேர்வு அறையில்
நான் உன்னை பார்த்துக் கொண்டே எழுதியதை
நான் உன்னை பார்த்து தான் எழுதுகிறேன் என்று
தவறாய் புரிந்து கொண்ட ஆசிரியர்
தேர்வறையை விட்டு வெளியேற்றினாரே
நினைவிருக்கிறதா................?"

2. உன் பிறந்த நாளுக்கு என்ன பரிசு வேண்டும்
என்று உன்னிடம் நான் கேட்ட போது
'என்ன பரிசாகயிருந்தாலும் அது உன்னுடயதாக
நாளை உலகத்தில் பிறந்ததாக இருக்க வேண்டும்' என்றாய்.
நீ பரிசாய் கேட்டது என் கவிதைகளை
தான் என்பதை புரியாமல்
அன்றிரவு முழுவதும் யோசித்து விட்டு
ஒன்றும் தோனாமல் மறுநாள் உன்னிடம் சொன்னேன்...
அதற்கு நீ எனக்காக யோசித்து தூங்காமல் சிவந்த விழிகளும் வாடிய இந்த முகமும்
தான் என் பிறந்த நாள் பரிசென்று
என் முகத்தை உன் கைகளில் தாங்கி
இரண்டு கண்களுக்கும் முத்தமிட்டாயே நினைவிருக்கிறதா........?

3. நம் பள்ளி வேதியியல்
ஆய்வுக்கூடத்தில் வைத்து உன்
பிறந்த நாள் பரிசை கொடுத்து விட்டு
யாருமே பார்க்க வில்லை என்று நிம்மதியாக
ஒரு வாயில் வழியாக நீயும்
மறு வாயில் வழியாக நானும்
வந்து கொண்டிருந்ததை ஆய்வுக் கூடத்திற்கு
எதிர்ப்புறம் இருந்த வகுப்பறைகளின்
மாடியிலிருந்து எல்லா மாணவர்களும்
வரிசையாக நின்று பார்த்துக் கொண்டிருந்தார்களே
நினைவிருக்கிறதா.....?

4. ஆண்டு விழாவில் ஆடிய உன் நடனப் புகைபடங்களை
ஆசிரியர் அறையில் இருந்து எடுக்க(திருட) முயன்று
வசமாக சிக்கிக் கொண்ட என்னை ஒரு வாரம்
வகுப்பிலிருந்து தள்ளி வைத்திருந்தார்கள்..
அந்த நாள் இரவு தொலைபேசியில் எனை அழைத்து..
'ஆசிரியர் அறையிலிருந்து என் புகைப்படங்களை எடுக்க தைரியம் இருக்கிறது.....
நீ என்னை காதலிக்கிறேன் என்று சொல்ல தைரியமில்லையா.!!!1'
என்று செல்லமாக எனை கடிந்து கொண்டாயே
நினைவிருக்கிறதா..........???"

5. நம் காதல் விஷயம் பள்ளியில் பரவ
ஆரம்பித்த சில நாட்களில்
பள்ளியின் ஆண்டுவிழா வந்தது..
'கலைநிகழ்ச்சியில் அடுத்ததாக
தனி நடனம் -பரதநாட்டியம்'
என்று உன் பெயரை அறிவித்த உடனே
பள்ளி மாணவர்கள மட்டுமின்றி
ஆசிரியர்களும் என்னை திரும்பி பார்த்தார்களே நினைவிருக்கிறதா......?"

6. பார்வை பறிமாற்றங்கள் மட்டுமே நிகழ்ந்து கொண்டிருந்த
அந்த ஆரம்ப நாட்களில்..
என்னுடைய இன்னொரு நண்பனும் உனை காதலிக்கிறான்
என்பதை அறிந்து நான் ஒதுங்கி கொள்கிறேன் என அவனிடம் கூறியதை
உன் தோழி மூலம் தெரிந்து கொண்ட நீ
நேராக என்னிடம் வந்து என் சட்டயை பிடித்து
'நம் காதலை விட்டுக் கொடுக்க நீ யாரடா ....ராஸ்கல்’
என்று ஒரு உலுக்கு உலுக்கி விட்டுப் போனாயே..
நினைவிருக்கிறதா......?"

7. தூரத்தில் என்னை பார்த்த உடனே
நீ தலைகுனிந்து நடக்க ஆரம்பிப்பாய்
நான் உனைக் கடந்து செல்லும்
அந்த ஒரு விநாடியில் சட்டென தலை நிமிர்ந்து
எனை பார்ப்பாய்
அந்த இடைவெளியும் உஷ்ணமும் நொடியும்
நம் இருவரின் டைரியிலும் அன்றையத் தினத்திற்க்கான
பக்கத்தில் நிரப்பப் பட்டிருக்கும்.

8. அசிங்கமாய் முடிவெட்டிக் கொண்ட நாட்களிலும்
இஸ்திரி பண்ணாத சட்டை அணியும் நாட்களிலும்
வகுப்பின் முதல் வரிசையில் அமராமல்
ஏதாவதொரு மூலையில் அமர்ந்திருப்பேன்
எனைக் கண்களால் தேடித் தேடி
நீ சளைக்கும் அழகை நான் ஒளிந்திருந்து ரசிப்பேன்....
கடைசியாக எனை நீ கண்டுபிடிக்கும்
அந்த நொடியில் மலரும் உன் முகம்
அந்த நொடிக்கு முந்தைய நொடிவரையிலுமிருந்த
என் நினைவுகளை ஒரேடியாக மறக்கச் செய்யும்.............

9. அந்த ஆரம்ப நாட்களில்
உன்னிடம் தொலைப்பேசியில்
நிறைய கதைத்திருக்கிறேன்..
நம் காதலை மோப்பம் பிடித்து விட்ட
கணித ஆசிரியை
என்னை பற்றி உன் வகுப்பில்
பெருமையாக பேசும் தமிழாசிரியர்
என எல்லாக் கதைகளும் பேசி விட்டு
தொலைபேசியை வைக்கும் சமயத்தில்
சரி நான் வைக்கிறேன் பார்க்கலாம் என்பாய்..
நான் உடனே எப்போ பார்க்கலாம் என்பேன்.
கூடிய சீக்கிரம் என்பாய்...
இதே கேள்வியை நான் கேட்பேன் என உனக்கும்
அதே பதிலைத் தான் நீயும் சொல்வாய் என் எனக்கும் தெரியும்..
ஆனாலும் அந்தக் கேள்வியும் பதிலும் இல்லாமல்
முடிந்ததில்லை நம் கதையாடல்..!

10. நீ தாவணி அணிந்தால் எனக்கு பிடிக்காது
அது உனக்கும் தெரியும்.
ஆனால் அன்று டியூசனுக்கு வேண்டுமென்றே
தாவணி அணிந்து வந்திருந்தாய்.
உனை கண்டுக் கொள்ளாமலேயே இருந்த
என் கவனம் கவர அடிக்கடி எனைக்
கடந்து சென்றாய்
உனை நான் பார்க்கும் போதெல்லாம்
இதழ்களை ஈரப்படுத்தியவாறே
கண்சிமிட்டினாய்
நான் பார்க்க மறுத்தால் எனைக்
கூப்பிட்டு பழிப்புக் காட்டுவாய்
அட இவளைக் கண்டுக் கொள்ளாமலிருந்தால்
ரசிக்கும் படியாய்
இவ்வளவு சேஷ்டை பண்ணுவாளா இவளென
மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்
டியூசன் முடிந்த அந்த நேரத்தில்
என்னை கடந்து நீ போன போது
உன்னிடம் நான்
'நீ தாவணி அணிந்தால் எனக்கு பிடிக்காது'
என்றேன் மீண்டும்...!

No comments:

Post a Comment